வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முறைகேடு தவிர்க்க வழிகாட்டுதல் அமல்; ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முறைகேட்டை தவிர்க்க வழிகாட்டுதல்களை  உருவாக்கி அமல்படுத்தும்படி ஐகோர்ட் கிளை  உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியைச் சேர்ந்த  செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ல்  எஸ்எஸ்எல்சி முடித்தேன். 2009ல் ஓட்டுநர் உரிமம் பெற்றேன். கடந்த  22.11.2010ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். பின்னர் பதிவை புதுப்பிக்க மறந்த நான்  அரசு சலுகை அறிவித்ததும் பதிவை புதுப்பிக்க  முயற்சித்தேன். ஆனால், எனக்கான பதிவு எண் அபிமன்னன் என்பவருக்கு  வழங்கப்பட்டு, அவருக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.   எனவே, பதிவுமூப்பு  அடிப்படையில் எனக்கு வேலைவாய்ப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு  கூடுதல் பிளீடர் கண்ணன் ஆஜராகி, ‘‘கடந்த 2014ல் ஆவணங்களை  திருத்தியது, முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட புகார்களால் மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலராக இருந்த தொண்டீஸ்வரனுக்கு கட்டாய ஓய்வு  அளிக்கப்பட்டது’’என்றார்.

இதையடுத்து  நீதிபதி, ‘‘தொண்டீஸ்வரன் மீது குற்றவியல் நடவடிக்கை  எடுப்பதை துறை இயக்குநர் உறுதிசெய்ய  வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் சமையலராக பணியாற்றும்  அபிமன்னன் மீதான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். மனுதாரரின்  கோரிக்கையை கருணையுடன் 2 வாரத்தில் பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கை முன்னுதாரணமாக கொண்டு,  வேலைவாய்ப்பக பதிவு மற்றும் ஆவணங்களை திருத்தி முறைகேடு நடப்பதை  தவிர்த்திட தேவையான தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கி  அமல்படுத்துவதை வேலைவாய்ப்பக இயக்குநர் உறுதிசெய்ய வேண்டும். ’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: