நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க நிபந்தனைகளை வெளியிட்டது அரசு

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் தேசிய விருது வழங்கப்படும். இந்தாண்டு நல்லாசிரியர் தேசிய விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விருதுகளை பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய 11 பேர் கொண்ட குழுவை அமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை:

 

38 மாவட்டங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 171, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் 171 ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 342 விருதுகளும், மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில்  மாவட்டத்துக்கு 1 ஆசிரியர் என 38, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 2, சமூகப் பாதுகாப்பு  துறை பள்ளிகள் 2, மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 2 என மொத்தம் 386 விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அந்த  குழு பரிந்துரை செய்யும்  ஆசிரியர்கள் பட்டியலில் இருந்து  மாநில தேர்வுக் குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்.  மாநில தேர்வுக் குழுவுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் தலைவராக இருக்க வேண்டும். அவரின் கீழ் 10 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுபணியாற்றி இருக்க வேண்டும்; கற்றல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். அரசியலில் பங்கு பெற்ற, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களை பரிந்துரை செய்யக் கூடாது. கல்வியை வணிக ரீதியாக கருதி செயல்படும் ஆசியர்களை பரிந்துரை செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: