ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி அரசு அறிவித்த மின்னஞ்சலில் தமாகாவினர் பதிவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளது. தற்பொழுது தமிழக அரசு சார்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அல்லது ஒழுங்குப்படுத்த மக்களிடம் கருத்து கேட்பதற்காக homeses@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. அவை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.

இதனால் பல பேர் பணத்தை இழந்து, சொத்தை இழந்து, சமுதாயத்தில் மரியாதையை இழந்து, லட்சக் கணக்கில் கடன்வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 28 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். வளரும் இளைஞர்களையும், படிக்கும் மாணவர்களையும், குறுக்குவழியில் அதிக பணம் சம்பாதிக்க, அவர்கள் மனதில் ஆசையை தூண்டி, மாய வலையில் வீழ்த்தும் இணையவழி சூதாட்டங்கள் வருங்கால சந்ததியினரை அடியோடு அழித்துவிடும்.

சூதாட்டத்தால் பணத்தை இழந்து அவற்றை ஈடுகட்ட கொள்ளை, கொலை என்று இளைய சமுதாயம் சீரழிவை நோக்கி திரும்பி கொண்டு இருக்கிறது. அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனனே தமாகாவினர் அனைவரும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று தங்கள் கருத்துகளை homeses@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12ம்தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: