பல்வேறு புகார்களால் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 1,850 கோயில்களை அதிரடியாக கையகப்படுத்திய அறநிலையத்துறை

சென்னை: பல்வேறு புகாரின் பேரில் கடந்த ஓராண்டில் மட்டும் தனியார் கட்டுபாட்டில் உள்ள 1850 கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் அல்லாத 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களின் நிர்வாகம் தனிநபரோ அல்லது அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம், கட்டிடங்கள், நிலங்கள் குத்தகைக்கு விடுவதன் மூலம் வருமானம் தொடர்பான கணக்குகளை ஒவ்வொரு மாதமும் அறநிலையத்துறையிடம் சமர்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவ்வாறு மாதம் தோறும் கோயில் நிர்வாகம் கணக்குகளை தாக்கல் செய்வதில்லை. மாறாக, தனியார் சிலர் அந்த கோயில்களின் வருமானத்திலோ அல்லது கோயில் சொத்துக்களையோ சுருட்டி விடுகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த விசாரணையில் கோயிலில் முறைகேடு செய்து இருப்பது ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அந்த கோயில்களின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்து கொள்கிறது அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்ளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 கோயில்கள் வரை அறநிலையத்துறை கையகப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், அறநிலையத்துறை கட்டுபாட்டில் வரும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது, முறைகேடு புகார் தொடர்பாக கடந்த ஓராண்டில் மட்டும் 1850  கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. இந்த கோயில்களில் செயல் அலுவலர் நிலையிலான அதிகாரிகளை நியமனம் செய்து அவர்கள் மூலம் அந்தந்த கோயில்கள் நிர்வாக பணிகளை கவனித்து வருகின்றனர் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: