போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடம் ஜவுளி நிறுவன அதிபரை கடத்த முயற்சி; ஆந்திர கும்பல் கைது போலீஸ்காரர் உள்பட 3 பேர் தப்பி ஓட்டம்

பல்லடம்: போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடத்திற்கு வந்து விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன அதிபரை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (40). விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது நிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த சிலுக்குரிப்பேட்டையில் செயல்பட்டு வரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து கடந்த 2019 முதல் 2020ம் ஆண்டு வரை ரூ. 70 லட்சம் மதிப்பில் நூல் கொள்முதல் செய்துள்ளார். அதில் ரூ. 44 லட்சம் வரை திருப்பி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு ஏற்பட்டதால் இது பற்றி நூல் கொள்முதல் செய்யப்பட்ட நூல் மில்லுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மீதி தொகை ரூ. 26 லட்சத்தை  நிர்வாகம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.

இந்நிலையில், நூல் வியாபார இடைத்தரகர்கள் அர்பித் ஜெய் மற்றும் சின்னசாமியுடன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலூ மற்றும் ஆந்திரா மாநில போலீஸ் சீருடையில்  போலீஸ்காரர் கோபி ஆகிய 6 பேர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். ரூ.  26 லட்சம் தராமல் ஏமாற்றியதாக காட்டன் மில் தொடர்ந்த வழக்கில் சிலுகுரிப்பேட் நீதிமன்றம் தமிழ்செல்வனுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளதாக கூறினர். தகவலறிந்து வந்த தமிழ்செல்வனின் வக்கீல், அந்த பிடிவாரன்ட் போலியானது என்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து போலீசார், ஆந்திராவில் இருந்து வந்த 3 பேரை மடக்கிபிடித்தனர். போலீஸ் சீருடையில் இருந்த கோபி மட்டும் தப்பி ஓடிவிட்டார். கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: