மூணாறு அருகே மீண்டும் நிலச்சரிவு: தமிழக தொழிலாளர்கள் 450 பேர் உயிர் தப்பினர்.! 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வாரங்களாக பரவலாக பலத்த மழை  பெய்து வருகிறது. இந்த நிலையில்  மூணாறு அருகே கண்டலா புதுக்குடி பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு   திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 கடைகள், ஒரு கோயில் மற்றும் ஒரு  ஆட்டோ மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகே  தமிழக தோட்ட தொழிலாளர்கள் சுமார் 175 குடும்பத்தை சேர்ந்த 450க்கும்  மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான  இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலச்சரிவு காரணமாக மூணாறு -  வட்டவடா நெடுஞ்சாலை சேதமடைந்தது.

இதனால் பல மணி நேரம் இந்த  சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அதே  பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் மண்ணுக்கடியில்  புதைந்தன.  இது குறித்து அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதே போல தமிழகத்தில் இருந்து மூணாறு செல்லும் மலைப்பாதையிலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில் நிலச்சரிவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கவனமாக இருக்கும்படி கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: