தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தியில் அதிகளவில் உற்பத்தியான மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு தாராள விற்பனை

சென்னை: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை என மொத்தம் 3.24 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரம் அனல்,புனல், காற்றலாலை மற்றும் அணு மின்நிலையம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் - 4,320 மெகாவாட்; எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் - 516 மெகாவாட்; காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் - 8,615 மெகாவாட்; சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் - 5,303 மெகாவாட் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. இது இல்லாமல், தனியாரிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், மரபுசாரா எரிசக்திக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மின் உற்பத்தி கட்டமைப்புகளை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்நிலையங்கள் மூலமாக அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள், கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் 8,615.22 மெகாவாட் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நடப்பு 2021-22ம் ஆண்டில் மொத்தமாக 13,120 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2020-21ல் 12,555 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 565 மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த காலங்களில் காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுவதுமாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படாத நிலையில் தற்போது முழுவதுமாக கொள்முதல் செய்யப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களினால் மின் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் மாநிலங்களுக்கு மின்பரிமாற்றத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதேபோல் சூரிய ஒளி மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 6,115 மில்லியன் யூனிட்டாக இருந்த சூரிய மின் உற்பத்தி 17.80 சதவீதம் அதிகரித்து 2021-22ம் ஆண்டில் 7,203 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: