பனிமய மாதா பேராலய திருவிழா கோலாகலம்: தூத்துக்குடி வீதிகளில் அன்னை திருவுருவ பவனி

தூத்துக்குடி: உலக அளவில் பிரசித்திப் பெற்ற பசிலிக்கா அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலய 440வது திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.  திருவிழாவின் முத்தாய்ப்பாக பனிமய அன்னையின் திருவுருவ பவனி, இரவு 7 மணிக்கு துவங்கியது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட பனிமயமாதா என பேரன்போடு அழைக்கப்படும் திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் பனிமய அன்னையின் திருவுருவ பவனி மணல் தெரு, செயின்ட் பீட்டர் கோயில் தெரு, விஇ ரோடு, தெற்குபீச் ரோடு உள்ளிட்ட நகர முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை அடைந்தது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமய அன்னையை வழிபட்டனர். இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர். தங்களது படகுகளையும், பொதுமக்கள் வீடுகளையும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். விழாவையொட்டி தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இன்று (6ம் தேதி) காலை 5 மணிக்கு ஆலய உபகாரிகளுக்காகவும், பெருவிழா நன்கொடையாளர்களுக்காகவும் நன்றி தெரிவிக்கும் முகமாக முதல் திருப்பலி நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு 2ம் திருப்பலிக்கு பிறகு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: