ஆடி 3ம் வெள்ளி திருவிழா அம்மன் கோயில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு-சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பவனி

திருவண்ணாமலை : ஆடி 3ம் வெள்ளி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பச்சையம்மன் மன்னார்சாமி கோயிலில் நடைபெறும் ஆடி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்புக்குரியது. ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, பச்சையம்மன் பவனி வருகிறார்.

அதன்படி, ஆடி மாதம் 3ம் வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் பச்சையம்மனை வழிபட்டனர். மேலும், கோயிலில் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, இரவு 8 மணியளவில், சிம்ம வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், வரும் 12ம் தேதி நான்காம் வெள்ளியன்று அன்ன வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா நடைபெறும்.

படவேடு அம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த இந்திரவனம் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயிலில் நேற்று ஆடி 3ம் வெள்ளி திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். போளூர் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அம்மனை தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதேபோல், பெரணமலூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று சுவாதி நட்சத்திரம், கருட ஜெயந்தி மற்றும் வரலட்சுமி விரதம் என முப்பெரும் விழா நடந்தது. இதனை முன்னிட்டு மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பின்னர், கடன் நிவர்த்தி, திருமண தடை நீங்க வேண்டி சிறப்பு யாகவேள்வி பூஜை நடத்தப்பட்டது. பின்னர், மாலை வரலட்சுமி பூஜையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சன்னதியில் அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கஜலட்சுமி அலங்காரத்தில் பெருந்தேவி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கொண்டு வழிபட்டனர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.செய்யாறு: செய்யாறு- ஆற்காடு சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் நேற்று ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ்வார்க்கும் விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை கோ பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. அம்மன் கரகம் புறப்பாட்டை தொடர்ந்து கூழ்வார்த்தலும், ஊரணி பொங்கலும் நடந்தது. பின்னர், மாலை மூலவர் அம்மனுக்கு ஆயிரம் கண்களுடன் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், இரவு

உற்சவ மூர்த்தியான ஆதிபராசக்தி அம்மன் வானவேடிக்கையுடன், புஷ்ப அலங்காரத்தில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் நேற்று ஆடி 3ம் வெள்ளி திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை ஊரணி பொங்கல் வைத்து, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் முத்தாலம்மன் ஆகிய உற்சவமூர்த்திகள் சங்கு மேட்டிற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். பின்னர், அங்குள்ள ஓம்சக்தி கோயில் அருகே எழுந்தருளிய சுவாமியை திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின்ர், இரவு கரகாட்டம், மயிலாட்டம் வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது.

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அடுத்த செவரப்பூண்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ‌ஆடி 3ம் வெள்ளி திருவிழா நேற்று நடைபெற்றது.  இதையொட்டி, நேற்று காலை ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பிற்பகல் பறக்கும் சக்கரம் சுற்றுதல்,  அக்னி சட்டி எடுத்தல், அம்மனுக்கு பறந்து மாலை போடுதல், அலகு குத்துதல், பழம் குத்துதல் என பல்வேறு நேர்த்திக்கடன் செய்தனர்.

பின்னர், கோயில் வளாகத்தில் தீக்குண்டம் அமைக்கப்பட்டு ஏராளமான ஆண்களும், பெண்களும் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதிஉலா, நாடகம் ஆகியன நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி 3ம் வெள்ளி திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

Related Stories: