ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளில் முரம்பு, வண்டல் மண் கடத்தி செங்கல் சூளைகளுக்கு விற்பனை-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆரணி : ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்கு என கூறி ஏரிகளில் இருந்து முரம்பு, வண்டல் மண்ணை கடத்தி செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவசாய நிலங்களை மேம்படுத்தி கொள்வதற்காக நீர்நிலைகளில் உரிய விதிமுறைகளுடன் மண் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு வண்டல் மண் தேவை எனில் கலெக்டர், ஆர்டிஓ, கனிமவள அதிகாரிகள், தாசில்தாரிடம் மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் மண் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில், ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் போலியாக விண்ணப்பித்து முரம்பு மற்றும் வண்டல் மண்ணை எடுத்து செங்கல் சூளைகள் மற்றும் கட்டிட பணிக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஒருமுறை அனுமதி பெற்ற கடிதத்தை வைத்து கொண்டு, ஆரணி அடுத்த வேலப்பாடி பாம்புதாங்கல் ஏரி, கல்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் சிலர் ஜேசிபி மூலம் டிப்பர் லாரி, டிராக்டர்களில் இரவு, பகலாக முரம்பு, வண்டல் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.

இவ்வாறு கடத்தி செல்லப்படும் மண் லோடு ஒன்றுக்கு ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை செங்கல் சூளைகள், கட்டிடப்ப ணிகளுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இனிவரும் நாட்களில், ஆரணி பகுதிகளில் ஏரியில் இருந்து முரம்பு மற்றும் வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கும் நபர்கள், உண்மையாக விவசாய பயன்பாட்டிற்காக தான் விண்ணப்பித்துள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை செய்து, அதன் பிறகு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே ஏரிகளில் முரம்பு, வண்டல் மண் எடுக்க கலெக்டர் அனுமதித்துள்ளார். ஆனால் வண்டல் மண், முரம்பு கடத்தி முறைகேடாக விற்பனை செய்வது தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: