குன்றத்தூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார். விழாவில், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.

அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 9551 மாணவ, மாணவியர்களுக்கு இந்த கல்வியாண்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. 2021-2022 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும்  11ம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 323 கோடியோ 3 லட்சத்து 61 ஆயிரம் செலவில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் கடந்த ஜூலை 25ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி சத்யா சதுரங்கப் விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும், இந்த கல்வி ஆண்டிற்கான குன்றத்தூர் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குன்றத்தூர் உள்ளாட்சி அமைப்பினரின் ஒத்துழைப்புடன் பள்ளியில் நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகின்றது. 2021-22 கல்வியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9551 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 4 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரத்து 517 மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. குன்றத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 343 மாணவிகளுக்கும், குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. நமது அரசு, மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1541 தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 1,44,000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை ரூ. 33 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்து 99 ஆயிரம் குழந்தைகள் ரூ. 66 கோடியே 20 லட்சம் செலவில் எண்ணும் எழுத்தும் என்ற இயக்கத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகையும், அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கி வருகிறது. கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், அதில் கல்வி செல்வம் தான் சிறந்தது. ஆகவே மாணவர்கள் அனைவரும் பெற்றோர்கள் கஷ்டத்தினை உணர்ந்து நன்றாக பயின்று அனைத்து துறையிலும் சிறந்த வல்லூநர்களாக திகழ வேண்டும் என இத்தருணத்தில் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: