கேரளாவில் தொடரும் மழை 22 அணைகள் திறப்பு ஆறுகளில் வெள்ளம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நிரம்பியுள்ள முல்லைப் பெரியாறு, மலம்புழா உட்பட 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து தீவிரமாக மழை பெய்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. முல்லைப் பெரியாறு அணை 137 அடியை தாண்டியதை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டது. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு சில அடிகளே உள்ளதால் அந்த அணைக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மிக முக்கிய அணைகளில் ஒன்றான மலம்புழா அணையும் நேற்று திறக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக இதுவரை கேரளாவில் தென்மலை, பேப்பாறை, அருவிக்கரை, நெய்யார் சிம்மினி, பீச்சி உள்பட 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், கேரளா முழுவதும் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ஆறு, பம்பை உட்பட பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராய் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: இடுக்கி மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்வதால் முல்லைப் பெரியாறு அணை  நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், அணைப்பகுதியில்  வசிக்கும் மக்கள்  கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, தமிழ்நாட்டுக்கு தற்போது  கொண்டு செல்லப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க, தாங்கள் நடவடிக்கை எடுக்க  வேண்டும். அணைக்கு வரும் நீர்வரத்தை விட கூடுதல் தண்ணீரை கொண்டு செல்ல  வேண்டும். இது தொடர்பாக தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும்,  கேரளா பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் தகவல்  தெரிவிக்க வேண்டும்.

Related Stories: