உங்கள் முன்பே வாதிட விரும்புகிறேன்!: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஐகோர்ட் நீதிபதியிடம் மன்னிப்பு கோரியது பன்னீர் தரப்பு..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கோரியது. பொதுக்குழு வழக்கை தனிநீதிபதி ராமசாமி விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையின் போது, எந்த உள்நோக்கத்துடனும் குறை கூறவில்லை என்று பன்னீர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் விளக்கம் அளித்தார். வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனுவை வாபஸ் பெற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்தினார்.

தலைமை நீதிபதிக்கு வழங்கிய கடிதத்தை திரும்ப பெறுவதாக மனுதாக்கல் செய்யுங்கள் எனவும் நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து தங்கள் முன்பே வாதிட விரும்புவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்..திறந்த மனதோடு வழக்கை நடத்துங்கள் என்றும் நீதிபதியிடம் பன்னீர் தரப்பு வேண்டுகோள் விடுத்தது. ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்காக விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் சற்று நேரம் தள்ளிவைத்தது.

வழக்கு விவரம்:

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.

அதன்படி வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை தள்ளிவைக்கும் படி பன்னீர்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, ஓ.பி.எஸ் தரப்பில், ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளதாலும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கோரியுள்ளது.

Related Stories: