ஓசூரில் தொடர் மழையால் கால்நடைகளுக்கு உணவாக சாலையில் கொட்டப்படும் தக்காளி-விலை குறைவால் விவசாயிகள் வேதனை

ஓசூர் : ஓசூர் அருகே விலை குறைவாலும், மழையால் அழுகியும் வருவதால் கால்நடைகளுக்கு உணவாக தக்காளி சாலைகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனை குரங்குகள் மற்றும் கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. நல்ல மண்வளம் கொண்ட ஓசூர் பகுதியில் தக்காளி, அவரை, துவரை, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், கத்தரி, வெண்டை என பல்வேறு வகை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது. மூன்று மாத விளைச்சல் என்பதால் தக்காளியை விவசாயிகள் அதிகளவில் பயிரிடுகின்றனர். கடந்த சில நாட்களாக ஓசூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விலை சரிந்து வருகிறது.

தக்காளி கிலோ ₹2 முதல் ₹5க்கு விற்கப்படுவதால், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக சாலையில் கொட்டுகின்றனர். இதனை ஆடு, மாடுகள், குரங்குகள் சாப்பிட்டு வருகின்றன. மேலும், தொடர் மழை காரணமாக தக்காளியின் தரம் குறைந்துவிட்டது. இந்த தக்காளியை பெட்டிகளில் அடைக்கும் போது மழையில் நனைந்த தக்காளிகள் உடனடியாக அழுகுவதால் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: