காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்-கடலாடி மக்கள் கோரிக்கை

சாயல்குடி : கடலாடி அருகே காவிரி கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால் கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2009-2010ம் ஆண்டில் திமுக அரசால் ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக திருச்சி ரங்கம் அருகே உள்ள முத்தரசநல்லூர் பகுதி காவிரி ஆற்றில் 4 ராட்சத கிணறுகள், நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அதிலிருந்து ராட்சத குழாய்கள் மூலமாக புதுக்கோட்டை, சிவகங்கை வழித்தடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை உள்ளிட்ட நகராட்சிகள், சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர், மண்டபம் உள்ளிட்ட 11 பேரூராட்சிகள், கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, ஆர்.மங்கலம், போகலூர், நயினார்கோயில் உள்ளிட்ட 11 யூனியன்களிலுள்ள சுமார் 2 ஆயிரத்து 300 கிராமங்களுக்கு நாள் ஒன்றிற்கு 100 எம்.எல்.டி தண்ணீர் தடையின்றி விநியோகம் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை, ஆங்காங்கே குழாய் சேதம், முறைகேடான இணைப்பு போன்ற காரணங்களால் தற்போது 75 எம்.எல்.டிக்கு கீழான அளவில்தான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் சார்பாக குழாய்கள், சேதங்கள் சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு காட்டுப்பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது.கடலாடி அருகே புரசங்குளம் பாடுவனேந்தல் இடைப்பட்ட பகுதியில் சாலையோரம் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக ஓடி வருவதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.

இதனால் கடலாடி ஒன்றியத்திலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

கிராமங்களுக்கு தண்ணீர் வராததால் மக்கள் குடிதண்ணீருக்காக, சாலையோரம் உடைப்புகளிலிருந்து கசியும் நீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து, தள்ளுவண்டியில் வைத்து, விபத்து அச்சத்துடன் எடுத்து சென்று, பயன்படுத்துவதாக கூறுகின்றனர். எனவே காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிதண்ணீர் விநியோகம் செய்ய தமிழ்நாடு குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலாடி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: