மாமல்லபுரம், வெங்கப்பாக்கம், அனுமந்தை சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்; ஒன்றிய சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவிப்பு

சென்னை: மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை 90 கி.மீ. இடையிலான சாலை இரு வழிச்சாலையாக உள்ளது. அதிக வாகன போக்குவரத்து காரணமாக அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இதனை கருத்தில், கொண்டு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. முதல் கட்டமாக மாமல்லபுரம் - முகையூர் இடையே 32 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை அமைகிறது. தொடர்ந்து, 2வது கட்டமாக முகையூர் - மரக்காணம், 3வது கட்டமாக மரக்காணம் - புதுச்சேரி இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி அடுத்தடுத்து நடக்க உள்ளது.

இதில், கூவத்தூர் அடுத்த வடபட்டினம், மரக்காணம் அடுத்த தேன்பாக்கம், புதுச்சேரிக்கு அருகே ஒரு சுங்கச்சாவடி என மொத்தம் 3 சுங்கச்சாவடிகள் அமைக்க ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த மாதத்துக்கு முன்பு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ. 1270 கோடியில் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி இசிஆர் சாலையையொட்டி ஒன்றிய அதிகாரிகள் பூமி பூஜை நடத்தினர். இதையடுத்து, 4 வழிச் சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகித்து வந்தது. தற்போது, இச்சாலையை ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சந்திப்பில் திருப்போரூர் செல்லும் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகள், மாமல்லபுரம் அடுத்த வெங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி, மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி என 4 சுங்கச் சாவடியிலும் கட்டணமின்றி பயணிக்கலாம் என ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: