22 ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து பணிமனை புதுப்பிக்கப்படுமா?: மானாமதுரை மக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முழுமையாக செயல்படாமல் முடங்கியுள்ளதை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை திருப்புவனம் இடையே நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து தினமும் மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மதுரை, பரமக்குடி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம், கேளிக்கை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். 38 வழித்தடங்களில் இயக்கப்படும் டவுன்பஸ்கள் மதுரை ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளில் ஏற்படும் டயர்பஞ்சர், பிரேக்டவுன் உள்ளிட்ட அவசர தேவைகளை நிறைவேற்ற மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 2004ல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பணிமனை தொடங்கப்பட்டது.

தொழிலாளர்கள் தங்கும் அறை, உதிரிபாகங்கள் வைக்கும் அறை, டீசல் நிரப்புவதற்கு பங்க், பழுதுநீக்கும் கேரேஜ் உள்ளிட்டவை கட்டப்பட்டன. ஆனால் பணிமனை தொடங்கிய சில மாதங்களிலேயே பேருந்துகளுக்கு டீசல் நிரப்புவது, பழுது நீக்குவது போன்ற பணிகள் நிறுத்தப்பட்டன. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.இங்கு இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட நகர்பேருந்துகள், மாவட்டங்களை இணைக்கும் பேருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு பழுதுநீக்க டீசல் நிரப்ப வசதியில்லாமல் போனதால் சிவகங்கை போக்குவரத்துக்கழகப் பணிமனையில் நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே மானாமதுரை பணிமனையில் நிறுத்தப்படுகின்றன.

மேலும் பணிமனையில் காவலாளி மட்டும் பணியில் உள்ளார். இந்தப் பணிமனைக்குரிய இடம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு சொந்தமானது என்பதால் ஆண்டுதோறும் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் வாடகை செலுத்தப்படுகிறது. மானாமதுரையில் இயக்கப்படும் பேருந்துகள் சிவகங்கையில் இருந்து இயக்கப்படுவதால் கூடுதலாக டீசல் செலவாகிறது. இட வாடகை, காவலாளி ஊதியம், டீசல் செலவு என ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை அரசுப் போக்குவரத்துக் கழகம் வீணாகச் செலவழிப்பதாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.

ரூ.30 லட்சம் வீணாகிறது

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், மானாமதுரையை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசுபஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர இரவு சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு கடைசியாக வரும் மொபசல் பஸ்களும் இரவு பயணிகள் இல்லாமல் சிவகங்கைக்கு செல்கிறது. டவுன்பஸ்களும் வெறும் வண்டியாக திரும்பி செல்வதால் டீசல் செலவு அதிகம் ஆகிறது. தற்போது மகளிருக்கு இலவச பயணம் அறிவித்த நாளில் இருந்து டவுன்பஸ்களுக்கு வழக்கமாக வரும் கலெக்சன் குறைந்துள்ள நிலையில் டீசல் செலவும் அதிக விரயத்தை ஏற்படுத்துகிறது. சிப்காட் தொழிற்பேட்டைக்கும் இடம், குடிநீர் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் வீணாவதைத் தடுக்க மானாமதுரை பணிமனையை மீண்டும் திறந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: