பம்பையில் கரைபுரளும் வெள்ளம்!: பிற்பகல் 3 மணிக்கு மேல் மலையேற அனுமதி இல்லை..சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த பத்தனம்திட்டா ஆட்சியர்..!!

பத்தனம்திட்டா: பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் அறிவித்திருக்கிறார். சபரிமலையில் தரிசனம் முடித்து மாலை 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும் எனவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கேரளாவில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், மொத்தமுள்ள 14 மாவட்டங்களில், 13 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பம்பை ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர கேரளா முழுவதும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அதிக அளவில் ஏற்படுகிறது. முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. நெய்யார், பேப்பாறை, அருவிக்கரை உள்பட பல அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாளில் கேரளாவில் கனமழைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், பம்பை வெள்ளம் காரணமாக சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் தெரிவித்துள்ளார். பத்தனம்திட்டா, பம்பை, சபரிமலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Related Stories: