மின் கட்டணங்கள் குறித்து வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்பக்கூடாது: பொதுமக்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்

சென்னை: மின் கட்டணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்பக்கூடாது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், மாநகர மின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றின் செயல்பாட்டை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன் உடன் இருந்தனர்.

பிறகு அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மின் தேவை 14,433 மெகாவாட் என்று இருந்த நிலையில், மழையின் காரணமாக 12,400 மெகாவாட் அளவிற்கு குறைந்துள்ளது. எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை மழையால் பாதிப்பு இல்லாமல் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் வழிகாட்டுதலின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக 2021-22ம் ஆண்டு 13,120 மில்லியன் யூனிட் கூடுதலாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல சூரிய மின் உற்பத்தி 2021-22ம் ஆண்டு 7,203 மில்லியன் யூனிட் அளவிற்கு அதிகரித்துள்ளது.

தமிழக வரலாற்றிலேயே 2021-22ம் ஆண்டு அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு 1,17,261 மில்லியன் யூனிட்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எந்த அளவிற்கு மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது ஏற்கனவே தெளிவாக எடுத்துச் சொல்லிருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் இல்லாத ஒரு மின் கட்டணத்தை இருப்பது போலவும், மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லாத இடங்களில் பாதிப்பு இருப்பது போலவும் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். பொதுமக்கள் அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.  மின் கட்டணங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பக்கூடாது.

Related Stories: