தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு ரூ.26.31 கோடியில் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் ரூ.26.31 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்தின் பல்வேறு வருவாய்ப் பிரிவினர், தொழில்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த வாரியம் உயரமான கட்டிடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டிடங்கள், மறுகட்டுமான திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி திட்ட பகுதியில் ரூ.7 கோடியே 37 லட்சத்து 53 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோட்ட அலுவலக கட்டிடம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், சாத்தனூர் கிராமம், கே.கே. நகரில் 1.39 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியே 55 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், தோப்பூர் கிராமத்தில் தோப்பூர் தன்னிறைவு திட்டப் பகுதியில் ரூ.4 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர கோட்ட அலுவலகக் கட்டிடம், மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், உச்சப்பட்டி கிராமத்தில் உச்சப்பட்டி பகுதியில், ரூ.2 கோடியே 87 லட்சம் செலவில் விருந்தினர் மாளிகை போன்றவை ரூ.26 கோடியே 31 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் ஹிதேஸ் குமார் மக்வானா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: