பிரேதப் பரிசோதனைகள் தொடர்பாக தலைமை குற்றவியல் நீதிபதி அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரை:  மதுரையை சேர்ந்த வக்கீல் அருண் சுவாமிநாதன், பிரேத பரிசோதனை அறைகளில் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென கடந்த 2008ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘‘விதிப்படி பிரேத பரிசோதனை முடித்த 24 மணிநேரத்திற்குள் மாஜிஸ்திரேட் மற்றும் துறைத்தலைவருக்கு அறிக்கையளிக்க வேண்டும். பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி முழுமையாக இயங்க வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் அறிவியல் அலுவலரை நிபுணர் குழு மூலம் நியமிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.

இதில், மாவட்டந்தோறும் அறிவியல் அலுவலரை நியமிக்க வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதேபோல், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்த மனுக்களை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், ‘‘குற்ற வழக்குகளில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை விபரம், இதன் மீது அறிக்கை பெறப்பட்ட விபரம், அறிக்கை பதிவு செய்யப்பட்ட விபரம் ஆகியவற்றை மதுரை முதன்மை குற்றவியல் தலைமை நீதிபதி தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: