காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

காரைக்கால்: காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடியில் லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (49) இவர் மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரேவதி தனது குடும்பத்தினருடன் காரைக்காலில் நடைபெற்று வரும் மாங்கனி திருவிழாவுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு, மரக்கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்போது அறையில் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1500 ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேவதி கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்கு பதிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிறகு இதனை தொடர்ந்து மோப்ப நாய் அர்ஜுன் மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பிறகு வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக சீனியர் எஸ்பி லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் எஸ்பி நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் பிரவின் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: