மதுரை திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ ஷூட்டுக்கு தொல்லியல் துறை நிரந்தர தடை

மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ ஷூட்  எடுக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான, மதுரை திருமலை நாயக்கர் மகால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நூற்றுக்கும் அதிகமான சினிமாக்கள், விளம்பரப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், நூற்றாண்டுகள் கடந்த மகாலின் சுவர்கள், தூண்கள் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில் நீதிமன்றம் கடந்த 2011 முதல் திரைப்படங்கள் எடுக்க தடை விதித்தது. இதற்கிடையில் சமீபத்தில் குறும்படம் ஒன்று, திருமலை நாயக்கர் மகால் உட்பகுதியில் எந்த ஒரு அனுமதியுமின்றி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இங்கு எடுக்கப்பட்ட காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த படத்தில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது போன்றும், பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன. இதுதொடர்பாக, தொல்லியல்துறை மதுரை மண்டல உதவி இயக்குநர் (பொறுப்பு) சிவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்களில் படப்பிடிப்பு நடந்த நிரந்தரமாக தடை விதித்து அரசாணை உள்ளது. எனவே மதுரை திருமலை நாயக்கர் மகாலில் குறும்படம், பெரும்படம் எடுக்கவும், போட்டோ, வீடியோ ஷூட் எடுக்கவும், பிளாஷ் லைட், அம்பர்லா லைட் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் டிரோன் பயன்படுத்தவும், நகை, விளம்பரம், திருமணம், மாடல் என எவ்வகை போட்டோ ஷூட் எடுக்கவும் தடை விதித்து ஆணையிடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: