நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் காவல்: மும்பை நீதிமன்றம் அனுமதி..!!

மும்பை: நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 1034 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றமும் நடைபெற்றது என்று அமலாக்கத்துறையினரின் வழக்கில் சஞ்சய் ராவத் முக்கிய நபராக சேர்க்கப்பட்டுள்ளார். மஹாரஷ்டிராவின் புரேகா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்புகளை சீரமைப்பு செய்ததில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது என்பது குற்றச்சாட்டு.

சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் வலது கை என அறியப்படும் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. இந்நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை  8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரிய நிலையில் 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எதற்கும் வளைந்து கொடுக்காதவர் என்று கூறியுள்ளார்.

Related Stories: