கோவையில் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவன குடோனில் கைவரிசை காட்டிய முன்னாள் ஊழியர் கைது

கோவை: பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவன குடோனில்  கைவரிசை காட்டிய முன்னாள் ஊழியர்  கைது செய்யப்பட்டுள்ளார். கையாடல் புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டார். பழிவாங்குவதற்காக கைவரிசை காட்டி போலீசில் சிக்கியுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு பின்புறம் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவன டெலிவரி பாயிண்ட் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அன்னூர் சுற்று வட்டாரத்தில் ஆன்லைன் மூலம் அந்த வர்த்தக நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் அந்த குடோனுக்கு வந்த பிறகு வாடிக்கையாளர்களின் முகவரிக்கு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு குடோனில் ஊழியர்கள் வழக்கம் போல் பொருட்களை சரிபார்த்துவிட்டு குடோனை பூட்டி சென்றனர். 25 ஆம் தேதி அதிகாலை கடையின் ஷட்டர் பூட்டு திறக்கபட்டு கடை திறந்திருப்பதாக கடை மேலாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மேலாளர் பிராகஷ் பாபு குடோனை ஆய்வு செய்த போது நள்ளிரவில் குடோனின் ஷட்டரை உடைத்து கல்லாபெட்டியில் இருந்த பணம் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா கார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அன்னூர் போலீசார் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்ற நிலையில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கடையின் முன்புறம் ஷட்டர் பூட்டு உடைக்காமல் சாவியை வைத்து திறக்கப்பட்டிருந்ததும் லாக்கரும் உடைக்கப்படாமல் சாவியை கொண்டு திறக்கப்பட்டிருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடோனில் பணிபுரிபவர்கள் மற்றும் ஏற்கனவே பணி புரிந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியாற்றி கையாடல் புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த 30 வயதான ஆனந்த என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த ஆனந்தை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் லாக்கரை திறந்து ரூ.5.27 லட்சம் பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

தொடர் விசாரணையில் பணத்தை திருடும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் சில மாதங்களுக்கு முன்னர் ரூ.1 லடசம் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக பொய் புகார் கூறி தன்னை பணி நீக்கம் செய்துவிட்டதாகவும் அதற்கு பழிவாங்கவே டெலிவரி குடோனில் திருட்டில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். வழக்கமாக வெளிப்புறம் ஷட்டரின் சாவியை வைத்துவிட்டு செல்லும் இடம் தனக்கு தெரியும் என்பதால் அந்த சாவியை எடுத்து ஷட்டரை திறந்து உள்ளே சென்று லாக்கரின் சாவியை எடுத்து கொள்ளையை அரங்கேற்றியதாகவும் ஆனந்த் கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்க பட்ட ரூ.5.27 லட்சம் பணத்தை மீட்ட போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: