சென்னை ஏர்போர்ட்டில் இன்று பயன்பாட்டுக்கு வர இருந்த 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் தள்ளி வைப்பு: நீதிமன்ற வழக்கு, தீயணைப்பு துறை தடையில்லா சான்று கிடைக்காததால் தாமதம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இன்று பயன்பாட்டுக்கு வர இருந்த அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு, தீயணைப்பு துறை பாதுகாப்பிற்கான தடையில்லா சான்று கிடைக்காததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில், 2.5 லட்சம் சதுர அடி பரப்பில், 6 அடுக்கு மாடிகளுடன், அதிநவீன மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி இந்தாண்டு தொடக்கத்தில் நிறைவடைந்து விட்டது. ஜனவரி மாத இறுதியில் இருந்தே, ‘இன்னும் ஒரு மாதத்தில் புதிய நவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும்’ என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்த அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் (இன்று) பயன்பாட்டிற்கு வரும் என்றும், இந்த கார் பார்க்கிங்கில், மின்சார வாகனங்களையும் நிறுத்தலாம், அந்த மின்சார வாகனங்களுக்கு மின்சக்தி, சார்ஜ் செய்து கொள்ளலாம். அதை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு, அதற்கான கட்டணத்தையும் செலுத்தி கொள்ளலாம். தவிர ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை நிறுத்தலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்டபடி இன்று மல்டி லெவல் கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்த கார் பார்க்கிங்கிற்கு, தீயணைப்பு துறையிடம் இருந்து பாதுகாப்பு பற்றிய தடையில்லா சான்று பெற வேண்டும். அதற்கு விண்ணப்பித்திருக்கிறோம். சான்று இன்னும் வரவில்லை. ஏற்கனவே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் 123 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிற்கு, புதிய ஊழியர்களை நியமித்து, கார் பார்க்கிங்கில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் ஏற்கனவே பணியாற்றிய  ஊழியர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர், புதிய கார் பார்க்கிங் திறக்கப்படும்’ என்றனர்.

Related Stories: