கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் வசூலான பதிவு தொகை ரூ.90 லட்சம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வேளச்சேரி: கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டியில் வசூலான பதிவு தொகை ரூ.90 லட்சம் அரசு தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வழங்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது 3ம் ஆண்டு  கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டி வரும் 7ம் தேதி பெசன்ட்நகரில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடைசி நாளான நேற்று வேளச்சேரி, எம்ஆர்டிஎஸ் சாலை, ரயில் நிலையம் அருகே கடைசி நாள் முன்பதிவு துவங்கியது. நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களின் பெயர், விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு இந்த மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த போட்டியில் 8,541 பேர் பங்கேற்றனர். இவர்களிடம் இருந்து பதிவு தொகையாக ரூ.23,41,776 கிடைத்தது. கடந்த ஆண்டு 19,596 பேர் பங்கேற்றனர். இவர்களிடம் பதிவு தொகையாக ரூ.56,02,693 பெறப்பட்டது. இவை இரண்டும் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12 மணிவரை ஆன்லைன் பதிவு நடைப்பெறுவதால், கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் பங்கேற்பர். இம்முறை பதிவு தொகை ரூ.90 லட்சத்தை எட்டக்கூடும். இத்தொகை எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய்-சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகியவற்றுக்கு அறக்கட்டளை ஏற்படுத்த சுகாதார செயலாளரிடம் வழங்கப்படும்.

வரும் 7ம் தேதி நடைபெறும் மாரத்தான் போட்டி துவக்க விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2வது பரிசு ரூ.50 ஆயிரம், 3வது பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் தொகுதி   எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், பெருங்குடி மண்டல குழு தலைவர்  ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், 186வது வார்டு உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: