மோடி அரசுக்கு எதிராக சதி டீஸ்தா, மாஜி டிஜிபி ஜாமீன் மனு டிஸ்மிஸ்

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் டீஸ்தா செடல்வாட், முன்னாள் டிஜிபி.க்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத்தில் 2002ம் நடந்த கோத்ர ரயில் எரிப்பு கலவர வழக்குகளில் பொய் ஆவணங்களை தயாரித்து அப்பாவி மக்களை கைது செய்ததாக இம்மாநில முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமாரும், பிரபல சமூக செயற்பாட்டாளர் டீஸ்தா செடல்வாட்டும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் உத்தரவின் பேரில், மோடி தலைமையிலான அப்போதைய குஜராத் பாஜ அரசை கலைப்பதற்காக சீர்குலைக்க நடத்தப்பட்ட பெரிய சதியின் ஒரு பகுதியாகவே இந்த கலவரம் நடத்தப்பட்டது. படேலின் உத்தரவின் பேரில் செடல்வாட்டுக்கு ரூ.30 லட்சம் கொடுக்கப்பட்டது. ஸ்ரீகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்,’ என்று குற்றம்சாட்டி உள்ளது. இந்த வழக்கில் ஆர்.பி.ஸ்ரீகுமாரும், டீஸ்டாவும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை அகமதாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதன் கூடுதல் முதன்மை நீதிபதி டிடி தக்கர், இருவருக்கும் நேற்று ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: