ஆன்லைன் ரம்மிக்கு தடை வருமா? தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்துள்ளதுடன், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ரம்பி விளையாட்டினால் ஏற்பட கூடிய நிதியிழப்பு, தற்கொலை மற்றும் ஆபத்துகளை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து கடந்த மாதம் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த குழு தாக்கல் செய்த அறிக்கை பற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்திலும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்டம் இயற்றுவது பற்றிய ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளர் குமார் ஜயந்த், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: