ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ரூ.17.5 கோடியில் 320 கடைகள் கட்ட திட்டம்: கமிஷனர் தகவல்

ஊட்டி:  ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ரூ.17.5 கோடி மதிப்பில் 320 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக  நகராட்சி கமிஷனர் காந்திராஜா தெரிவித்தார்.

ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் காந்திராஜா மற்றும் துணை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: துணை தலைவர் ரவிக்குமார்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இதையறிந்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்   கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரை உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து நிவாரண பணிகளை மேற்கொண்ட முதல்வருக்கு நன்றி. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.24 கோடியில் நிலத்தடி மின் கேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கோடப்பமந்து உட்பட அனைத்து மழை நீர் கால்வாய்களை தூர் வார கூடுதல் நிதி பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகரில் தெரு விளக்கு பிரச்னை அதிகமாக உள்ளதால், சம்பந்தப்பட்ட கான்ட்ரக்டரை மாற்ற வேண்டும். முஸ்தபா (திமுக): 2002ம் ஆண்டு 16 கட்டிடங்கள் முறையாக அனுமதி பெறாமலும், நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை காட்டிலும் கூடுதலாக கட்டியுள்ளதாக கூறி  நடவடிக்கை எடுக்கப்பட்டது. 20 ஆண்டுக்கு பின்னர் தற்போது, அதில், 2 கட்டிடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டிடங்கள் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் தடையை மீறி 4வது மாடி கட்டியுள்ளனர். அவர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?மேலும் கோடப்பமந்து பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுகிறது. இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மார்க்கெட் பகுதியில் 120 கடைகள் இடித்து கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடை வைத்துள்ளவர்களுக்கே மீண்டும் கடைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட் பகுதியில் கழிப்பிடங்களை சீரமைக்க வேண்டும்.

கமிஷனர்: ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள ஒரு பகுதி கடைகள் இடித்து கட்டுவதற்கு தற்போது ரூ.17.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 320 கடைகள் இடித்து கட்டப்படும். வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல், பணிகள் மேற்கொள்ளப்படும். கடைகள் கட்டும் வரை ஏடிசி, பார்க்கிங் தளங்களில் தற்காலிக கடைகள் வைத்து கொள்ள வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.தம்பி இஸ்மாயில் (திமுக): காந்தல் நகரின் மைய பகுதியில் செல்லும் மழை நீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது. எனவே, இப்பகுதியில் மழை நீர் கால்வாயை தூர் வார வேண்டும்.

இதேபோல, காந்தல் பகுதியில் பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. அதனை சீரமைக்க நடவடிக்கை வேண்டும். கீதா (திமுக): நகராட்சியில் ஒய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் பலருக்கு இதுவரை பண பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு பண பலன்கள் வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேணடும். இதேபோல, எனது வார்டில் உள்ள கழிப்பிடங்களுக்கு தண்ணீர் இல்லாமல் சுகாதாரமின்றி கிடக்கிறது. எனவே, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

வனிதா (திமுக): எனது 6வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் மிகவும் மாசடைந்து, பொதுமக்கள் அதனை குடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, சுகாதாரமான மற்றும் சுத்திகரித்த குடிநீரை வழங்க வேண்டும். கமிஷனர்: பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சகுந்தலா (அதிமுக):  எனது வார்டிற்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், சாலை பழுதடையும் அபாயம் உள்ளது. எனவே, இதனை சீரமைக்க வேண்டும். கடந்த வாரம் பெய்த மழையின்போது, எனது வார்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிதற்கு நன்றி.

குமார் (அதிமுக): எனது வார்டிற்கு உட்பட்ட தோப்லைன் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். தமிழகம் மாளிகை சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். ராஜேஷ்வரி (காங்): மரவியல் பூங்கா பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக தனியார் ஒருவர் தடுப்பு சுவர் கட்டியுள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து, கவுன்சிலர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.

*வனவிலங்குகள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

கூட்டத்தில் கவுன்சிலர் ஜார்ஜ் (திமுக) பேசும்போது, ‘‘தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்கள் மற்றும்  நடைபாதை கடைக்காரர்களுக்கு கடைகள் கட்டித்தர தீர்மானம் கொண்டு  வரப்பட்டுள்ளது. ஆனால், அதில் முதற்கட்டமாக 55 கடைகள் கட்டுவதற்காக  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கடைகள் ஒதுக்கும் போது  பிரச்னைகள் ஏற்படும். எனவே, 120 கடைகளும் கட்டி முடித்த பின்,  வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஸ்டேட் பேங்க் செல்லும்  நடைபாதையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

 இதனால், பொதுமக்கள்  தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, இதனை சீரமைக்க வேண்டும்’’ என்றார். கவுன்சிலர் ரஜினி  (காங்.) பேசும்போது, ‘‘எனது வார்டிற்கு உட்பட்ட விஜயநகரம் பகுதியில் தற்போது வன  விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில்  வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் வன  விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, காட்டு  மாடுகள் வராமல் தடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: