இந்த ஆண்டு இறுதிக்குள் 4 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்க இலக்கு: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தகவல்

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் 4 லட்சத்துக்கும் அதிகமான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத் தேவையை பூர்த்தி செய்யவும், தட்கல் அனுமதிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தட்கல் பிரிவின் கீழ் இதுவரை தினமும் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதை இப்போது 200 ஆக உயர்த்தியுள்ளோம். இந்த கூடுதல் 100 பேருக்கான தட்கல் சேவை சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவா மையத்தில் நேற்று முதல் அமலானது. இதேபோல், வேலூரில் அமைந்துள்ள தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் பாஸ்போர்ட் அனுமதி எண்ணிக்கை 40ல் இருந்து 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில், 40லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட 4 பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் 13 போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூலம்  நாள்தோறும் சராசரியாக 2200 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், சென்னை ஆர்பிஓ மூலம் 2.26 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கணிப்புகளின்படி, 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 4 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்போர்ட்டுகள் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தால் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு எஸ்.கோவேந்தன் கூறினார்.

Related Stories: