வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க திட்டம்: ஆக.1ல் அனைத்துக்கட்சி கூட்டம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த சென்னை, தலைமை செயலகத்தில் நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த 6ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் (தேர்தல் அதிகாரிகள்) சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அளித்த அறிவுரைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்படி, ஆகஸ்டு 1ம் தேதி (நாளை மறுதினம்) முதல் இதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், ஆதார் நம்பரை 6பி என்ற விண்ணப்பத்தின் மூலம் வாக்குப்பதிவு அலுவலரிடம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக வீடு, வீடாக வாக்குப்பதிவு அலுவலர்கள் சென்று விவரங்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறும்போது, ‘‘ ஆகஸ்டு 1ம் தேதி முதல் தொடங்கப்படும் ஆதார் எண் இணைப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விளம்பரம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது. அதோடு, மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் (கலெக்டர்கள்) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி கூட்டத்தை நடத்தி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்தி, அவர்களின் கருத்துக்களையும் பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளை மறுதினம் (ஆகஸ்டு 1ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும். இதற்கிடையில் வருகிற செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் திருத்தம், 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயர்களை புதிதாக சேர்க்கும் பணிகள் வழக்கம்போல் தொடங்கும். அப்போது நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் இந்த 6பி படிவம் பெறப்பட்டு, ஆதார் நம்பர் இணைக்கப்படும். சென்னையில் 3,750 வாக்குச்சாவடி அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தொடங்குகிறார்கள்’’ என்றார்.

Related Stories: