மாணவர்கள் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

வேலூர்: மாணவர்கள் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரே பொறுப்பு ஏற்றி அவற்றை மாற்றி தர வேண்டும். மாணவர்கள் பஸ்களில் தொங்கிக்கொண்டு செல்வது, ஆசிரியர்களை அவமதித்தல், ராக்கிங் செய்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், சாதி, மதம், பொருளாதார அடிப்படையில் புண்படுத்துதல், கேலி செய்தல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை, படங்களை எழுதுதல் என ஏதேனும் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பள்ளி ஆலோசகர் முதலில் ஆலோசனை வழங்க வேண்டும்.

இதே மாணவன் 2 மற்றும் 3வது முறையாக தவறு செய்தால் ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். 5 திருக்குறள்களை படித்து பொருளோடு எழுதி காட்ட வேண்டும். அல்லது 5செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்திற்கு படித்து காட்ட வேண்டும். மூன்றாவது எச்சரிக்கையிலும் மாணவன் தவறை உணரவில்லை என்றால், 4வது நிகழ்வில் காவல் நிலையத்திலிருந்து குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை, ஆலோசனை வழங்க வேண்டும். 5வது முறையாக தவறு செய்தால், சுற்றுச்சூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் ஒழுங்குபடுத்த உதவும் என்பதால் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம் என கூறியுள்ளார்.

Related Stories: