மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன்; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது: எனது கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுகிறது.

ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் கண்டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால் புலனாய்வு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பயன்படுத்தப்படக்கூடாது. நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துகிறபோது, அதில் தவறுகள் நடக்கலாம். யாராவது ஏதாவது தவறு செய்துவிட்டால் அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தீய நோக்கத்துடனான பிரசாரத்தை நான் எதிர்க்கிறேன்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வால் எதிர்க்கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள் விசாரணை அமைப்புகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். விசாரணை அமைப்புகள் ஒரு சார்பின்றி நடந்து கொண்டால் எனக்கு அதில் பிரச்னை இல்லை. 2024ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடையும். நான் எண்ணிக்கை பற்றி கூற முடியும். அவர்கள் எங்கிருந்து வருவார்கள் என சொல்ல முடியும். ஆனால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: