கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற பிளஸ் 2 மாணவி, மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். பள்ளி சார்பில் சரியான பதில் அளிக்காததால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி  சாலை மறியல், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறை நடந்த அன்றே மாணவியின் மரண வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், இரு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே  கைது செய்யப்பட்ட் 5 பேரையும் 3 நாள் காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது 5 பேருக்கும் ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், கனியாமூர் சக்தி பள்ளி முதல்வர் சிவசங்கர், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்த நிலையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் ராமசந்திரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறவிருக்கிறது. 

Related Stories: