சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று விடுமுறை

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காக்களுக்கு இன்று விடுமுறை என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது.  

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச சதுரங்கப் போட்டியான, 44-வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடக்கிறது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், இன்று முதல் ஆக., 9 வரை போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான கோலாகல விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். இதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிக அளவில் செல்லும் நிலை உள்ளதால், பாதுகாப்பு கருதி வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று (வியாழக்கிழமை) விடுமுறை என நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 2-ம் தேதி பூங்காக்கள் செயல்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: