தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: தமிழகத்தைப் பொறுத்தவரை 6 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 3,273  ஏக்கர் நிலங்களில் சூரிய மின் சக்தி பூங்கா அமைப்பதற்காக நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், நடப்பு 2022-2023ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி:  தமிழகத்தில் முதல் சூரிய மின் சக்தி பூங்கா திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்ற முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை திருவாரூர், கரூர், நாகபட்டினம், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 3,273 ஏக்கர் நிலங்கள் இந்த சூரிய மின் சக்தி பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு மின் வாரியத்திற்கு அந்த நிலத்தினுடைய வகைபாடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பூங்கா அமைப்பதற்கு முதல்வரால் அடிக்கல் நடப்பட இருக்கின்றன. 50,000 விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்க கூடிய நிகழ்வை செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: