திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி 3 பிரிவுகளில் அஜித் பங்கேற்பு

திருச்சி: திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் இயங்கி வருகிறது. இங்கு இந்திய ரைபிள் கிளப் சார்பில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 24ம் தேதி துவங்கியது. பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெறுகிறது. வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர், இளைஞர், முதியவர் என வயது வாரியாக பிரிக்கப்பட்டு அதில் சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜூனியர் (21 வரை), சீனியர் (21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனி பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அவர் 10 மீட்டர், 25 மீட்டர் பிஸ்டல் மற்றும் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்றார். நாளை (29ம் தேதி) முதல் 31ம்தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. தகுதி சுற்றுக்கு முன்னேறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும். அதனை தொடர்ந்து இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் பல மாவட்டங்களில் காவல்துறையில் பணியாற்ற கூடியவர்கள் இந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: