காதல் திருமணம் முடித்த 26 நாளில் ஊருக்குள் வந்து அவமானப்படுத்தியதால் மகள், மருமகனை வெட்டிக் கொன்றேன்-இளம்பெண்ணின் தந்தை வாக்குமூலம்

எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியை சேர்ந்தவர் வடிவேல் மகன் மாணிக்கராஜ். இவரும், இதே ஊரை சேர்ந்த முத்துக்குட்டி மகள் ரேஷ்மாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ரேஷ்மா, கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூன் 26ம் தேதி ரேஷ்மாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. மேலும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தந்தை ராணுவ வீரர் ஒருவரை பேசி முடிவு செய்தார்.

கடந்த 28ம் தேதி மாணிக்கராஜிம், ரேஷ்மாவும் ஊரை விட்டு வெளியேறி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அங்குள்ள மாணிக்கராஜின் சித்தி மாரியம்மாள் வீட்டில் தங்கியிருந்தனர். இதனிடையே மகளை காணவில்லை என்று முத்துக்குட்டி, எட்டயபுரம் போலீசில் புகார் செய்தார். ரேஷ்மாவும், மாணிக்கராஜிம் தங்கள் உயிருக்கு முத்துக்குட்டியால் ஆபத்து என்று திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஜூன் 29ம் தேதி புகார் செய்தனர். திருமங்கலம் போலீசாரும், எட்டயபுரம் போலீசாரும் முத்துக்குட்டியிடம் பேசி, இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று எழுதி வாங்கினர்.

இந்நிலையில் மாணிக்கராஜிக்கு திருமங்கலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், ரேஷ்மா ஊருக்கு அழைத்து வந்துள்ளார். மாணிக்கராஜின் தாய் பேச்சியம்மாளுடன் அவர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பேச்சியம்மாள் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய போது மாணிக்கராஜிம், ரேஷ்மாவும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, காதல் தம்பதியை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. கோவில்பட்டியில் பதுங்கியிருந்த அவரையும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முத்துக்குட்டியின் மனைவி மகாலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். முத்துக்குட்டி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: எனது ஒரே மகளான ரேஷ்மாவை பிரியமாக வளர்த்தேன். அவள், மாணிக்கராஜை காதலித்தது எனக்குப் பிடிக்கவில்லை. நான், ராணுவத்தில் வேலை பார்க்கும் ஒருவரை மாப்பிள்ளையாக பார்த்தேன். ஆனால் என்னை மீறி, மாணிக்கராஜை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் முடிந்து 3 வாரத்திற்குள்ளேயே ஊருக்குள் வந்து எங்களை அவர்கள் அவமானப்படுத்தினர்.

சமீபத்தில் எனது மனைவி மகாலட்சுமி பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் ரேஷ்மாவும் தண்ணீர் பிடித்தார். அங்கு வந்த மாணிக்கராஜ், மகாலட்சுமியை அவமானப்படுத்தி பேசியுள்ளார். மேலும், ‘‘நீங்கள் எங்களை பிரிக்க நினைத்தீர்கள். இப்போது என்ன நடந்தது? சொத்தையெல்லாம் விற்கப் போகிறீர்களாமே, ஒன்றும் செய்ய முடியாது.

எங்களுக்குத் தான் சொத்தை தர வேண்டும்.’’ என்று கூறியுள்ளார். இதை வீட்டிற்கு வந்து என்னிடம், மகாலட்சுமி கூறினார். இதனால் எனக்கு மாணிக்கராஜ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவனை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று அவன் வீட்டிற்கு சென்றேன். மகளும், மாணிக்கராஜிம் இருந்தனர். நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், மாணிக்கராஜை வெட்ட ஓங்கினேன். அப்பா, அவரை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று ரேஷ்மா குறுக்கே விழுந்து தடுத்தார்.

இதில் அவள் கழுத்தில் வெட்டு விழுந்தது. அவள் கீழே சரியவே, மாணிக்கராஜையும் வெட்டி விட்டு, அரிவாளை வீட்டில் வைத்து விட்டு, கோவில்பட்டிக்கு சென்றேன். ஆனால் போலீசார் என்னைக் கைது செய்து விட்டனர். இவ்வாறு கூறியதாக போலீசார தெரிவித்தனர்.பின்னர் கோவில்பட்டி கோர்ட்டில் நீதிபதி பீட்டர் முன்னிலையில் முத்துக்குட்டி, மகாலட்சுமியை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் முத்துக்குட்டி தூத்துக்குடி பேரூரணி சிறையிலும், மகாலட்சுமி கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories: