திருப்பத்தூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சாலை, கால்வாய் வசதி மேம்படுத்த நடவடிக்கை-நகர மன்ற தலைவர் தகவல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தெரிவித்தார்.திருப்பத்தூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நகர மன்ற கூட்டம் நடந்தது. நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா வரவேற்றார். பின்னர், கூட்டத்தில் 69 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அவற்றை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

24வது வார்டு கவுன்சிலர் சரவணன்: எங்கள் பகுதியில் உள்ள கால்வாய் அனைத்தும் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ்: தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. அதனை உடனடியாக அகற்றி விரைவில் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.34வது வார்டு கவுன்சிலர் டி.டி‌.சங்கர்: நகராட்சியில் விடப்படும் டெண்டர்கள் குறித்து நகர மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதேபோல், நகராட்சியில் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், எங்களது வார்டில் உள்ள அவ்வை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். கால்வாய் சீரமைப்பு செய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ்: தற்போது மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு தண்ணீர் வருகிறது. தொடர்ந்து கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்று குடிநீர், பாலாறு அம்பலூர் குடிநீர் ஆகியன பைப்லைன் மூலம் திருப்பத்தூர் நகராட்சிக்கு வருகிறது. இதில் மேட்டூரில் இருந்து வரும் குடிநீர் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது திருப்பத்தூர் நகராட்சிக்கு வரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர், நாள்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும்.

1வது வார்டு கவுன்சிலர் குப்பம்மாள்: திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. அதற்காக எம்எல்ஏ நிதியில் இருந்து நமது எம்எல்ஏ நல்லதம்பி ஒரு சில வார்டுகளுக்கு நிதி வழங்கியுள்ளார். அதனை 36 வார்டுகளுக்கும் வழங்க வேண்டும். மேலும், நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ்: நாள்தோறும் நான் திருப்பத்தூர் நகர பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறேன். குப்பைகள் கொட்ட தனியிடம் தேர்வு செய்யப்படுகிறது.

இடம் தேர்வானதும் குப்பைகளை கொட்டும் பணி நடைபெறும். கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான் நகர மன்ற தலைவராக பொறுப்பேற்று 3வது கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். திருப்பத்தூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக வர வேண்டும் என்று மக்கள் பணியை செய்து கொண்டு வருகிறோம்.

தற்போது தமிழக உள்ளாட்சி துறை அமைச்சரிடம் சென்று நகர வளர்ச்சிக்கு மற்றும் புதிதாக நகராட்சி அலுவலகம் கட்ட ₹20 கோடியும், சாலை வசதி மேம்படுத்த நிதியும் வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விரைவில் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 20 மீட்டர் தார் சாலை அமைக்கப்படும்.

அதேபோல், புதுப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே தண்ணீர் தேங்கி சந்திர நகர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் நீரில் தத்தளிக்கிறது. இதனை தடுக்க கலெக்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கால்வாய் தற்போது சாலையாக மாறி உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலத்தின் அடியில்  தண்ணீர் தேங்காதவாறு அந்தனேரிக்கு செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நவீனமுறையில் அனைத்து பணிகளும் செய்யப்படும். முடிவில் நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

Related Stories: