மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கேரள வனத்துறையினர் அடாவடி

கூடலூர்: தேக்கடி செல்லும் தமிழக அரசு பஸ்சை சோதனை சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக, கேரள எல்லைப்பகுதியில் சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி உள்ளது. சுமார் 35 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரையில் இருந்து தேக்கடிக்கு 2 பஸ்களும், கம்பத்தில் இருந்து 2 பஸ்களும் (அண்டை மாநில பெர்மிட் பெற்று) தேக்கடிக்கு இயக்கப்படுகிறது. ெகாரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் சேவை தொடங்கப்பட்டாலும் கேரள வனத்துறையினர் முரண்டு பிடித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை, தேக்கடி சோதனை சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பஸ் ஊழியர்கள் பெர்மிட் இருப்பதாக எடுத்துக் கூறினாலும் வனத்துறையினர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். கேரள வனத்துறையினர் தரப்பில் கூறுகையில், ‘‘தேக்கடியில் உள்ள வாகன நிறுத்தம் ஆனவச்சாலுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தேக்கடிக்குள் பஸ்கள் செல்ல அனுமதி இல்லை’’ என விளக்கம் அளித்தனர். ஆனால் சோதனை சாவடியில் இருந்து தேக்கடிக்கு பஸ்சை பின்தொடர்ந்து வந்த வனத்துறை அதிகாரியின் வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதால் பழிவாங்கும் நடவடிக்கை இது என்றும் கேரள வனத்துறையின் இந்த அடாவடி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இன்று மீண்டும் சேவையை தொடர உள்ளதாகவும் தமிழக போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: