சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூர் இடையே நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்; மக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே  சோத்துப்பாக்கம், கீழ் மருவத்தூர் ஆகியவற்றின் இடையே சென்னையில் இருந்து திருச்சி வழியாக செல்லும் முக்கிய ரயில்வே பாதை உள்ளது. இதன் வழியாகத்தான் சென்னை தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சோத்துப்பாக்கத்தில் இருந்து செய்யூர் சென்று அதன் தொடர்ச்சியாக இசிஆர் சாலை வரை சுமார் 40 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இதன் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் சென்னை, புதுச்சேரி இ.சி.ஆர் நெடுஞ்சாலையையும் இணைக்க கூடிய சாலையாகும். இதன்காரணமாக ஏராளமான வாகனங்கள் சென்றுவருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சோத்துப்பாக்கம், கீழ் மருவத்தூர் இடையிலான ரயில்வே பாதையில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி  தவிக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட பகுதியில் ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டது. ஆனால் தற்போது பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மேலும் இங்கு சாலை அகலப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்றுவரும் பட்சத்தில் இந்த சாலையில் வாகன போக்குவரத்து மேலும் அதிகமாகிவிடும். எனவே சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும்போதே ரயில்வே மேம்பாலத்தையும் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: