வனபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிக்குண்டம் திருவிழா கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைந்து அரசின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டுக்கான 29வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராமசாந்தியும், 24ம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதலை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பக்காசுரன் சன்னதிக்கு முன்பாக அமைந்துள்ள பக்தர்கள் குண்டம் இறங்கும் சன்னதியை வந்தடைந்தது.

இதற்காக 36 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட திருக்குண்டம் 10 டன் விறகு கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. முதலில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜை செய்து, குண்டத்தில் பூப்பந்து உருட்டி இறங்கினார். அவரை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர்.

Related Stories: