தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆக.5ம் தேதி வரை நடைபெறும். பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்திருவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் பல பகுதியிலிருந்து லட்சக்கணக்கான இறைமக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழா கொரோனா ஊரடங்கை முன்னிட்டு முற்றிலும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல பனிமயமாதா பேராலய திருவிழா நடக்கிறது. இதனால் இறைமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதில் தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் கொடிப்பவனி நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை காலை 4.30 மணிக்கு ஜெபமாலை நடைபெற்று 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45க்கு 2ம் திருப்பலியும், அதனை தொடர்ந்து 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கொடியேற்றமும் பிஷப் ஸ்டீபன் தலைமையில் காலை 9.30 மணிக்கு 3ம் திருப்பலி நடைபெற்றது. உலக சமாதானத்திற்காக புறாக்கள், பலூன்கள் பறக்க விடப்பட்டன. பழைய துறைமுகத்தில் இழுவை கப்பலில் இருந்து சைரன் ஒலிக்க விடப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு கொடி கம்பத்தில் பால், பழங்கள் உள்ளிட்ட நேர்ச்சை பொருட்கள் படைத்து, வழிபட்டு, பொதுமக்களுக்கு வழங்கினர்.

பகல் 12 மணிக்கு பங்கு தந்தை ரூபஸ் பெர்ணான்டோ தலைமையில் பனிமயமாதாவுக்கு பொன்மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 3 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணி, பகல் 12 மணி, மாலை 3 மணி, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் விழாநாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆயர்கள், பங்கு தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்ட் 4ம்தேதியன்று இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திற்குள் பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. ஆக.5ம் தேதி நடைபெறும் சிகர நிகழ்ச்சியான பெருவிழாவில் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.

Related Stories: