மாநிலங்களவையில் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல்: டெல்லியில் திருச்சி சிவா எம்.பி. பேட்டி

டெல்லி: எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடக்கியதால் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, சுஷ்மிதா தேவ், டோலாசென், உள்ளிட்ட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாநிலங்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து திமுக எம்.பி.க்கள் உட்பட 19 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா; மக்கள் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல். பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச விரும்பினால் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். வேறு வழியில்லாமல் அனுமதிக்கப்பட்ட முறையில் உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியினருடன் ஆளுங்கட்சியினர் கலந்து பேசுவதில்லை. நாளை அவை தொடங்கும் போது சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்துவோம் இவ்வாறு கூறினார்.

Related Stories: