ஆற்காடு அருகே பாலாற்றில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி-நகராட்சி தலைவர் ஆய்வு

ஆற்காடு : ஆற்காடு அருகே பாலாற்றில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்காக, பாலாற்றில் 6 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பைப்லைன் மூலம் வேப்பூர் பாலாற்றங்கரையில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், அங்கிருந்து ராட்சத பைப்லைன் மூலம் ஆற்காடு நகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது.  இதன் மூலம் தினமும் 70 லட்சம்  லிட்டர் குடிநீர்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளம் ஏற்படும்போது, உறை கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் பைப்லைன்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இதனால் நகராட்சி பகுதிகளில் பல நாட்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பாலாற்றில் வெள்ளம் வரும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பாக குடிநீர் பைப்லைன் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து, முதற்கட்டமாக 3 உறை கிணறுகளுக்கு  பாலாற்றில் 5 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு, அதில்  பாதுகாப்பாக குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆற்காடு நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: