4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது..: 4 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு

டெல்லி: 4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியுள்ளது. கடந்த பட்ஜெட் தாக்கலின் போது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏலத்தை ஜூலை மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முடிவு செய்து இருந்தது.  

தற்போது மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் 4.30 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏலத்தின் மொத்த காலம் 20 ஆண்டுகளாகும். 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது.  

குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே விண்ணப்பித்துள்ளதால் ஏலத்தில் போட்டி பெரிய அளவில் இருக்காது என்று கூறப்படுகிறது. முன் வைப்பு தொகை அடிப்படையில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 14 ஆயிரம் கோடியும், ஏர்டெல் 5,500 கோடியும் முன் வைப்பு தொகையை செலுத்த உள்ளன. முன் வைப்பு தொகையை விட 10 மடங்கு கூடுதல் மதிப்பில் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க இந்த 2 நிறுவனங்களுக்கு உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை ஓரிரு மாதங்களில் பெரு நகரங்களில் மட்டும் தொடங்க உள்ளதாகவும், அதன் பின் இச்சேவை படிப்படியாக விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: