பனிமய மாதா பேராலயத்தில் 440-வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான மக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26இல் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவா்-மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவா்கள், பனைத் தொழிலாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

10ஆம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தோ் பவனி நடைபெறும்.ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டைப்போலவே நிகழாண்டும் பக்தா்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என, மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி அறிவித்துள்ளார்.அதன்படி, வரலாற்றில் 2ஆவது முறையாக பக்தா்கள் பங்கேற்பின்றி இப்பேராலயத்தின் 440-வது ஆண்டு திருவிழா தொடங்கியது.

கூட்டுத் திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன்புள்ள கொடிக்கம்பத்தில் மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பங்குத்தந்தை குமார்ராஜா, முக்கிய பங்கு நிா்வாகிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. அப்போது, பனிமய அன்னையை வேண்டி குரல் எழுப்பியும், சமாதான புறாக்களைப் பறக்கவிட்டும் திருவிழா தொடங்கியது. பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, திருவிழாவில் சப்பர பவனி, தோ் பவனி, நற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவின் மற்ற நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தா்கள் வந்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆலயத்துக்குள் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீா் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும், அப்போது கொரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றி பக்தா்கள் தனித்தனியே வந்து நோ்ச்சை செலுத்தலாம் என்றும், முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அன்னையை வழிபடலாம் என்றும் மறைமாவட்ட தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 2 காவல் துணைக் கண்காணிப்பாளா், 400 காவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories: