திருவள்ளூர் கீழச்சேரியில் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: கலெக்டர், காஞ்சி சரக டிஐஜி, எஸ்பி நேரில் விசாரணை; திருத்தணியில் சாலை மறியல்

சென்னை: திருவள்ளூர் கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளுர் கலெக்டர், காஞ்சி சரக டிஐஜி, திருவள்ளுர் எஸ்பி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பூசானம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா.(17). இவர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள சேக்ரட் ஹார்ட் என்ற அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

 இதற்காக பள்ளியின் விடுதியில் தங்கி இருந்தார். இந்த விடுதியில் 85 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வகுப்புக்கு சக மாணவிகள் விடுதியில் இருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர். அப்போது சக மாணவிகளுடன் வகுப்புக்கு கிளம்பி சென்றதும், சரளா மட்டும் மீண்டும் விடுதிக்கே சென்றுள்ளார். சக மாணவி வகுப்புக்கு வராததால், அவர்களில் ஒருவர் விடுதி அறையில் சென்று பார்த்தபோது அதன் கழிவறையில் மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்த பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுத்த தகவலின் பேரில் மப்பேடு போலீசார் சேக்ரட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் போலீசார் நேரில் சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை விவகாரம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதும், அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் விடுதியில் குவியத் தொடங்கினர். இதனையடுத்து திருவள்ளூர் எஸ்பி பெகர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர், செந்தில்குமார், மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோர் பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். கீழச்சேரிக்கு வந்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: விடுதி வார்டன் முதல் சக மாணவிகள், ஆசிரியைகள், பெற்றோர் உறவினர்களிடம் கருத்துக்கேட்டு அதனை பதிவு செய்திருக்கிறோம். மாணவியின் மரணம் குறித்து சமூக வலை தளங்களில் யாரும் தவறான கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்றார். அப்போது திருவள்ளூர் எஸ்பி பெகர்லா செபாஸ் கல்யாண் உடனிருந்தார்,மேலும், மாணவி தற்கொலை செய்து கொண்ட பகுதியில் தடயங்களை சேகரித்தனர். மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.க்களும் வந்ததால் மேலும் பரபரப்பாக காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாணவியின் மரணம் குறித்து காவல் துறை சார்பில் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இருப்பினும், மாணவியின் மரணம் குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இனி விசாரணையை தொடர்வார்கள் என்று தெரிவித்தார்.

 மகள் சரளாவின் மர்ம மரணத்திற்கு நியாயமான பதில் கிடைக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என பெற்றோர் தெரிவித்திருப்பதால் பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து மாணவியின் பெற்றரிடம்  பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

* பெற்றோருடன் கடைசியாக பேசிய மகள்

மாணவி சரளாவின் பெற்றோர் கூறுகையில், நேற்றுமுன்தினம் இரவு மகள் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது விடுதி ஆண்டுவிழாவிற்காக 500 ரூபாய் செலவுக்கு வேண்டும் என கேட்டார். தந்தை எங்கே இருக்கிறார் என விசாரித்ததாகவும், அவர் உடல் நலம் சரியில்லாமல் திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதை சொல்லவில்லை என்றும், சாதம், பருப்பு ரசம் ஆகியவற்றை இரவு சாப்பிட்டதாகவும் மகள் தெரிவித்ததாக கூறினர். மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், நேற்று காலை சக மாணவிகள் 4 பேருக்கு தலை முடி வாரி விட்டு நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

* தெக்களூரில் போலீஸ் குவிப்பு

தெக்களூர் மாணவியின் மர்ம மரணம் குறித்து உரிய பதிலை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவி சரளாவின் உறவினர்கள் மற்றும் தெக்களூர் கிராம மக்கள் பள்ளிப்பட்டு- பொதட்டூர்பே்டை சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அதே கீழச்சேரி பள்ளியில் பயிலும் மற்ற மாணவிகளின் பெற்றோர், உறவினர்களை அரசுப் பேருந்தில் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பள்ளியின் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க தெக்கலூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* எதனால் தற்கொலை

விடுதி வார்டன் ஷெரின் மாணவியை திட்டியதாக கிடைத்த தகவலையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதே நேரத்தில் கடந்த 2 மாதங்களாக மாதவிடாய் பிரச்னையில் அவதிப்பட்டு வந்தார். அதே போல் தந்தையின் உடல் நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்தது குறித்து மாணவியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

* தகவலில் குழப்பம்

நேற்று காலை 7 மணியளவில் விடுதியில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் மாணவியை பூச்சி கடித்ததால் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் கழித்து மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்றும், பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் மகளின் மரணத்தை மறைத்து விடுதி சார்பில் தகவல்கள் தருவதில் கடும் குழப்பத்தை விளைவித்ததாக மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

Related Stories: