திருப்பூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு 8,372 பேர் ஆப்சென்ட்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 147 மையங்களில் 39 ஆயிரத்து 773 பேர் எழுதினர். 8 ஆயிரத்து 372 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வினை திருப்பூர் மாநகரில் 4,697 பேர், அவினாசியில் 4,642 பேர், தாராபுரத்தில் 6,157 பேர், காங்கேயத்தில் 4,761 பேர், மடத்துக்குளத்தில் 1,875 பேர், ஊத்துக்குளியில் 1,628 பேர், பல்லடத்தில் 3,766 பேர், திருப்பூர் வடக்கு பகுதியில் 6,584 பேர், திருப்பூர் தெற்கு பகுதியில் 6,981 பேர், உடுமலையில் 7,054 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் இந்த தேர்வை 48 ஆயிரத்து 145 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

மாவட்டம் முழுவதும் தேர்வர்களுக்காக 147 மையங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. 166 தலைமை கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்தனர். இதுபோல் 43 மொபைல் கண்காணிப்பாளர்கள், 16 பறக்கும் படையினர், 174 வீடியோ கிராபர்கள், சூப்பர்வைசர்கள் 166 பேர் தேர்வை கண்காணித்தனர். குரூப் 4 தேர்வை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகார சாமி பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களுக்கு காலை 7 மணியில் இருந்தே பெரும்பாலான தேர்வர்கள் வந்தனர். அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தங்களது தேர்வு அறைகளை பார்வையிட்டனர். தேர்வர்களின் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டது.

இறுதி நேரத்தில் வந்த மாணவ&மாணவர்கள் அவசர அவசரமாக தேர்வு அறைக்குள் ஓடினர். மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் திருப்பூர் மாநகரில் 963 பேர், அவினாசியில் 828 பேர், தாராபுரத்தில் 1045 பேர், காங்கேயத்தில் 782 பேர், மடத்துக்குளத்தில் 265 பேர், ஊத்துக்குளியில் 223 பேர், பல்லடத்தில் 686 பேர், திருப்பூர் வடக்கில் 1198 பேர், திருப்பூர் தெற்கில் 1178 பேர், உடுமலையில் 1204 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரத்து 372 பேர் ஆப்சென்ட் ஆகினர். இதனால் 39 ஆயிரத்து 773 பேர் தேர்வு எழுதினர்.

Related Stories: